​“பாட்டி இன்னும் கூப்பிடுற மாதிரி தான் இருக்கு... ஆனா நான் தான் போக முடியல!”

சின்ன வயசுல

ஒரு குரல் இருந்தது.


பெயர் சொல்லி கூப்பிடும்.

கோபமா இல்லை.

அவசரமா இல்லை.


இப்போ அந்த குரல் இல்லை.

ஆனா காதுக்குள்ள

அது இன்னும் நிற்குது.


காலை நேரம்

வீட்டு வாசலில் உட்கார்ந்து

பாட்டி கோலம் போடுவாள்.


அந்த கோலத்துக்குள்

நான் விளையாடுவேன்.

அவள் கோபப்பட மாட்டாள்.


“அதை மிதிக்காதே”ன்னு சொல்லி

கோலத்தை திருத்துவாள்.

என்னையோ திருத்தவே மாட்டாள்.


சின்ன வயசுல

எனக்கு எதுவும் தெரியாது.

அவளுக்கும் என்ன சொல்லணும்னு தெரியாது.


அவள் செய்யும் எல்லாமே

“சாதாரணம்”னு தான் நினைச்சேன்.


குளிக்க சொல்லும்போது

“இன்னும் கொஞ்ச நேரம்”ன்னு

ஓடி ஒளிஞ்சேன்.


சாப்பிட சொல்லும்போது

“பசிக்கல”ன்னு பொய் சொன்னேன்.


அவள் சிரிச்சுக்கிட்டே

வட்டியில உணவு எடுத்து

வாசல் வரை வந்து நிற்பாள்.


“குளிரும் கண்ணே”

அவ்வளவுதான் சொல்லுவாள்.

அவள் வாழ்க்கை முழுக்க

அந்த மாதிரி தான்.


கூப்பிடுவாள்.

காத்திருப்பாள்.

பிறகு விடுவாள்.


மதியம்அவள் தனியா சாப்பிடும் போது நான் தூங்குவேன்.

அப்போ அவள் என்னை எழுப்ப மாட்டாள்.


“தூங்கட்டும்”ன்னு மெதுவா சொல்லி அவளே எழுந்து போயிடுவாள்.


அந்த வார்த்தையை

அப்போ கவனிக்கல.

இப்போ தான் புரியுது.


மாலை நேரம் அவள் வீட்டு முன் உட்கார்ந்து சாலையைப் பார்ப்பாள்.

நான் கேட்டேன் யாருக்காக பாட்டி?” வாசல்ல உட்கார்ந்திருக்கன்னு

அவள் சொன்னாள் நீ வருவேன்னுதான்.”


அந்த “நீ

அப்போ எனக்கு

அவ்வளவு பெரிசா தெரியல.


இரவு ஆகும்போது

அவள் என்னை பக்கத்துல உட்கார வைத்து கதை சொல்லுவாள்.


அந்த கதைகள்

புராணம் இல்லை.

அவளோட வாழ்க்கை தான்.


அப்போ நான் தூங்கிட்டேன்.

இப்போ தூக்கம் வர மாட்டேங்குது.


ஒருநாள் நான் வளர்ந்து

அந்த வீட்டுக்கு திரும்பி வந்தேன்.


வாசல் இருக்கு,அடுப்பு இருக்கு

அம்மிக்கல் கூட இருக்கு.


ஆனா…


“வா சாப்பிடலாம்னு கூப்பிடுற குரல் இல்லை.


காலில் மண் ஒட்டிக்கிட்டு

வீட்டுக்குள்ள ஓடின

அந்த நானும் இல்லை.


நான் மட்டும்

திரும்பி வந்தேன்.

பாட்டி திரும்பி வரல.


சின்ன வயசுல

அவள் எனக்காக காத்திருந்தாள்.


இப்போ நான் அவளை நினைச்சு

காத்திருக்கிறேன்.எதுக்குன்னு தெரியாம.


ஒருவேளை வாழ்க்கைன்னா

இதுதானோ?


யாரோ ஒருத்தர்

முழுக்க முழுக்க நம்மளுக்காக

வாழ்ந்துட்டு எதுவும் கேட்காம

போகிறதுதானோ?


“அவள் இருந்தப்போ ‘பாட்டி’னு கூப்பிட நேரம் கிடைக்கல…

இப்போ தினமும் நினைக்க நேரம் மட்டும் கிடைக்குது.”


                                  — பொன் லட்சுமி

                                          Lakshutalks


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சமயபுரம் மாரியம்மன் 1 ரூபாய் நாணயம் வேண்டுதல்: நினைத்தது நிறைவேற எளிய வழிமுறை!"

தடைகளை உடைத்து சிகரம் தொட்ட தருணம் - 1st Prize!" 🥇

"தொலைந்து போனது நம் சந்தோஷமா? அல்லது குழந்தைப் பருவமா?"